கட்டிட தீ விபத்தில் உயிர் தப்பியது எப்படி? - உயிர் பிழைத்த தமிழர் பரபரப்பு பேட்டி
கட்டிட தீ விபத்தில் உயிர் தப்பியது எப்படி என்பது குறித்து அங்கு வசித்து வரும் தமிழர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
கட்டிட தீ விபத்தில் உயிர் தப்பியது எப்படி என்பது குறித்து அங்கு வசித்து வரும் தமிழர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
தீ கொழுந்துவிட்டு எரிந்தது
கோரேகாவ் மேற்கு ஆசாத் மைதானம் அருகே ஜெய்பவானி என்ற 7 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் 7 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில் விபத்தில் கட்டிடத்தின் 2-வது மாடியில் வசித்து வரும் தமிழர் ஜான் வர்க்கீஸ் (வயது45) குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் இருந்து தப்பித்த திக், திக் நிமிடங்கள் குறித்து அவர் பரபரப்புடன் கூறியதாவது:- அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் கரும்புகை சூழ்ந்தது. நான் மூச்சுவிடமுடியாமல் திடுக்கிட்டு எழுந்தேன். அப்போது கட்டிடத்தின் கீழ் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
மின்சாரம் துண்டித்து இருள் சூழ்ந்தது
உடனடியாக வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்பி வீட்டை விட்டு வெளியே வந்தேன். அருகில் உள்ள வீட்டின் கதவை தட்டி அவர்களை எழுப்பினேன். மேலும் குடும்பத்தினருடன் வேகமாக மொட்டை மாடிக்கு ஓடினேன். திடீரென கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டிடத்தில் இருள் சூழ்ந்தது. மொட்டை மாடி நோக்கி ஓடியவர்கள் தவறி விழுந்து காயமடைந்தனர். எனக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
பூட்டை உடைத்து உயிர் தப்பினோம்
கடைசி மாடிக்கு சென்ற போது, மொட்டை மாடி கதவு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து திகைத்து போனேன். எப்படி மொட்டை மாடிக்கு செல்வது என யோசித்து கொண்டு இருந்த போதே, கரும்புகை கடைசி மாடி வரை சூழ்ந்தது. இதனால் எங்களுக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டது. நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். நல்லவேளையாக மாடிப்படியில் ஒரு இரும்பு பொருள் கிடைத்தது. அதை வைத்து மொட்டை மாடி செல்லும் கதவின் பூட்டை உடைத்தோம். மொட்டை மாடிக்கு சென்ற பிறகு தான் ஓரளவு நிம்மதி அடைந்தோம். இதற்கிடையே சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் எங்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். ஒரு வேளை பூட்டை உடைக்காமல் விட்டு இருந்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்து இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.