ஓடும் டாக்சியில் சிறுமி பலாத்காரம்; டிரைவர், நண்பர் கைது
ஓடும் டாக்சியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவர், நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
ஓடும் டாக்சியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவர், நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலாத்காரம்
தென்மும்பை மலபார்ஹில் பகுதியை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த 18-ந்தேதி பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு சிறுமி மலாடு மால்வாணியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு செல்ல வெளியே வந்தார். ஸ்டீபன் தேவாலயம் அருகே நின்றிருந்த டாக்சியில் ஏறி மால்வாணி புறப்பட்டு சென்றார். இந்த டாக்சியை ஸ்ரீபிரகாஷ் பாண்டே (வயது29) என்பவர் ஓட்டி சென்றார். தாதர் அருகே வந்தபோது அவரது நண்பரான சல்மான் என்பவர் டாக்சியில் ஏறி கொண்டார். இதையடுத்து தனியாக பயணித்த சிறுமியை ஓடும் டாக்சியில் வைத்து இருவரும் பலாத்காரம் செய்தனர்.
சிறுமி மீட்பு
பின்னர் சாந்தாகுருஸ் பகுதியில் சிறுமியை இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையே தனது மகள் காணாமல் போனதாக பெற்றோர் மலபார்ஹில் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து தேடி வந்தனர். அப்போது வக்கோலா போலீசார் ரோந்து பணியின் போது தனியாக நின்ற சிறுமியை கவனித்தனர். அங்கு சென்று நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி தான் என தெரியவந்தது. மேலும் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் தெரிவித்தார். இதன்படி போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் டாக்சியின் பதிவெண்ணை கண்டறிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 25-ந் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.