முகேஷ் அம்பானியின் மும்பை 'அன்டிலியா' இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு
மும்பையில் உள்ள ‘அன்டிலியா’ இல்லத்திற்கு பல்வேறு பாலிவுட் நடிகர், நடிகைகள் வருகை தந்தனர்.
மும்பை,
இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் உள்ள அல்டாமவுன்ட் ரோட்டில் பிரம்மாண்ட சொகுசு வீடு உள்ளது. 'அன்டிலியா' இல்லம் என்று அழைக்கப்படும் இந்த வீடு மொத்தம் 27 மாடிகளைக் கொண்டது. இந்த வீட்டில் நீச்சல் குளம் முதல் ஹெலிபேட் வரை பல்வேறு ஆடம்பர வசதிகள் உள்ளன.
இந்த 'அன்டிலியா' இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பாலிவுட் திரைப்பிரபலங்கள் வருகை தந்தனர். நடிகர் சல்மான் கான், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடிகை ரேகா, ஹேமமாலினி, தீபிகா படுகோன், ஜெனிலியா, அனன்யா பாண்டே, கரீஷ்மா கபூர், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோரும் வருகை தந்தனர். அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி, வசூல் சாதனை நிகழ்த்திய 'ஜவான்' திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.