மாநகராட்சி நிலத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டி மோசடி; உத்தவ் சிவசேனா எம்.எல்.ஏ. ரவீந்திர வய்கர் மீது வழக்குப்பதிவு

மாநகராட்சி வழங்கிய நிலத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டி மோசடியில் ஈடுபட்ட உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.எல்.ஏ. ரவீந்திர வய்கர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-15 19:15 GMT

மும்பை, 

மாநகராட்சி வழங்கிய நிலத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டி மோசடியில் ஈடுபட்ட உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.எல்.ஏ. ரவீந்திர வய்கர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.500 கோடி ஊழல்

பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ.வான ரவீந்திர வய்கர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மும்பை மாநகராட்சிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் முறையிட்டார். ரூ.500 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. மாநகராட்சி உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜோகேஸ்வரியில் உள்ள சும்ரிமோ கிளப்பிற்கு விளையாட்டு வசதியை செய்துகொடுக்க மும்பை மாநகராட்சி நிலம் வழங்கியதும், அந்த நிலத்தில் எம்.எல்.ஏ.வான ரவீந்திர வய்கர் தனது செல்வாக்கை பயன்படுத்தி நட்சத்திர ஓட்டல் கட்டுவதற்கு அனுமதி பெற்றதும் தெரியவந்தது. இது நிலத்தை பயன்படுத்துவதற்காக மும்பை மாநகராட்சியின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து மும்பை மாநகராட்சி கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எம்.எல்.ஏ.வான ரவீந்திர வய்கர் மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது மோசடி, குற்றவியல் சதி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துகளை வழங்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.வான ரவீந்திர வய்கரின் மனைவி பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ. ரவீந்திர வய்கர் ஜோகேஸ்வரி தொகுதியில் 2009-ம் ஆண்டு முதல் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தேவேந்திர பட்னாவிஸ் மந்திரி சபையில் அங்கம் வகித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்