மனைவியை சுட்டுக்கொலை செய்த முன்னாள் மேயரின் அண்ணன்; சிறிது நேரத்தில் அவரும் மாரடைப்பால் பலி

மும்பை அருகே முன்னாள் மேயரின் அண்ணன் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்தார். சிறிது நேரத்தில் அவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2023-09-02 18:45 GMT

தானே, 

மும்பை அருகே முன்னாள் மேயரின் அண்ணன் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்தார். சிறிது நேரத்தில் அவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுட்டார்

மும்பையை அடுத்த தானே மாநகராட்சி முன்னாள் மேயர் கணேஷ் சால்வி. இவரது அண்ணன் கட்டுமான அதிபர் திலீப் சால்வி (வயது56). இவர் தானே மாவட்டம் கல்வா, கும்பர் அலி பகுதியில் உள்ள யஷ்வந்த் நிவாஸ் கட்டிடத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திலீப் சால்வி வீட்டுக்கு வந்தார். இரவு 10.15 மணியளவில் திலீப் சால்விக்கும், அவரது மனைவி பிரமிளாவுக்கும் (51) இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டினார். இதுதொடர்பாக மகனை தொடர்பு கொண்டு பிரமிளா கூறினார். உடனடியாக மகன் வீட்டுக்கு ஓடி வந்தார். எனினும் அவர் வீட்டுக்கு வருவதற்குள் திலீப் சால்வி துப்பாக்கியால் மனைவியை 2 முறை சுட்டார். இதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

மாரடைப்பால் உயிரிழப்பு

மனைவியை சுட்ட அடுத்த சில நிமிடங்களில் திலீப் சால்வியும் மயங்கி விழுந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகன் வீட்டுக்கு வந்த போது தாய், தந்தை 2 பேரும் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து போலீஸ் துணை கமிஷனர் கணேஷ் காவடே மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு முன்னாள் மேயரின் அண்ணன் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மனைவியை, திலீப் சால்வி கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மும்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்