புல்தானாவில் சிறுத்தைப்புலி தாக்கி விவசாயி பலி
புல்தானா மாவட்டம் தேவ்ஹரியில் சிறுத்தைப்புலி தாக்கி விவசாயி உயிரிழந்தார்
புல்தானா,
புல்தானா மாவட்டம் தேவ்ஹரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுனில் சய்னே(வயது38). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணி அளவில் தனது வயலில் வேலை செய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ஒன்று விவசாயி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் பேசிய வனத்துறை அதிகாரி சேத்தன் ரத்தோட், "உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்" என்று அறிவித்தார்.