விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை
விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீப்பளித்தது
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் வாசுதேயோ நினாவே மற்றும் ஜக்தீஷ் மோண்ட்கர். இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். அப்போது புகைப்பட கலைஞரும், ஒளிப்பதிவாளருமான ஓம்கர் ராவத் மற்றும் அவரது நண்பரான புனித் தேசாயிலும் கத்தாருக்கு சில கேமராக்களை கொண்டு செல்ல இவர்களை அணுகினர். அப்போது அவர்களுக்கு ஏற்றுமதி சான்றிதழை வழங்க அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் ரூ.4 ஆயிரம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டனர். இதன்பேரில் விமான நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர்கள் லஞ்சம் கொடுத்தனர். இந்தநிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் புகாரின்பேரின் லஞ்சம் வாங்கிய சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அதிகாரிகள் வாசுதேயோ, நினாவே மற்றும் ஜக்தீஷ் மோண்ட்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரத்துடன் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.