மகாளய அமாவாசை கொண்டாடப்பட்ட நிலையில் மும்பை பான்கங்கா குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு

மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்த நிலையில் பான்கங்கா குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-15 20:00 GMT

மும்பை, 

மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்த நிலையில் பான்கங்கா குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இதன்படி நேற்று முன்தினம் மகாளய அமாவாசை கொண்டாடப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள நீர்நிலைகளில் கூடி இந்து மக்கள் தர்ப்பணம் கொடுத்தனார். மும்பை வால்கேஷ்வரில் உள்ள பான்கங்கா குளத்தில் அன்றைய தினங்களில் பொதுமக்கள் சென்று தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

மீன்கள் செத்து மிதந்தது

அமாவாசை முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் நேற்று பான்கங்கா குளத்தில் இருந்த ஆயிரக்கணக்கிலான மீன்கள் செத்து கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சியினர் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகாளய அமவாசை கொண்டாடிய 2 நாட்களுக்குள் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குளம் அசுத்தமானதால் மீன்கள் இறந்தனவா? அல்லது இதற்கு வேறும் ஏதேனும் காரணம் உள்ளதா என கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குளத்தில் இருந்த தண்ணீரின் மாதிரியை மாநகராட்சியினர் கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்