ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டம்: மும்பையில் 2 நாட்களாக 40 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு
மும்பையில் ஆனந்த சதுர்த்தியையொட்டி கடந்த 2 நாட்களில் 40 ஆயிரம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
மும்பை,
மும்பையில் ஆனந்த சதுர்த்தியையொட்டி கடந்த 2 நாட்களில் 40 ஆயிரம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டம்
நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் மும்பையில் விநாயகர் சதுா்த்தி வெகு விமாிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கடந்த 19-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. மும்பை முழுவதும் மண்டல்கள் (பந்தல்கள்) மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் சார்பில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வீடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் யானை முகத்தானை பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர். 10 நாட்களாக நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தால் நகரமே மகிழ்ச்சியில் திளைத்தது. மும்பை முழுவதும் மின் விளக்கு அலங்காரம், பந்தல்களால் விழாக்கோலம் பூண்டு இருந்தது. 10 நாட்களும் பொதுமக்கள் வீடுகளில் பிரதிஷ்டை செய்து இருந்த சிலைகளுக்கு பூஜை செய்தும், மண்டல்களுக்கு சென்று விநாயகரை வழிபட்டும் வந்தனர். பிரசித்தி பெற்ற மண்டல்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சிலைகள் கரைப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்த சதுர்த்தியுடன் (சிலை கரைப்பு தினம்), 10 நாள் கொண்டாட்டம் முடிந்தது. ஆனந்த சதுர்த்தியையொட்டி மும்பையில் ஆயிரக்கணக்கில் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. பொதுமக்கள் பாரம்பரிய நாசிக் டோல், நவீன கால டி.ஜே. இசையுடன் ஆடிப்பாடி, உற்சாகமாக எடுத்து சென்று விநாயகருக்கு பிரியா விடை கொடுத்தனர். இதேபோல கரைக்க எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகளை தரிசிக்க பொதுமக்கள் சாலைகளில் திரண்டனர். 'கணபதி பப்பா மோரியா, மங்கல மூர்த்தி மோரியா' என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது. மக்கள் வெள்ளத்திற்கு நடுவே சிலைகள் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்த பணி இரவு விடிய, விடிய நடந்ததுடன் நேற்று மதியம் வரை நீடித்தது. குறிப்பாக நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் மண்டலில் இருந்து புறப்பட்ட லால்பாக் ராஜா விநாயகர், மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மறுநாளான நேற்று காலை 9.15 மணியளவில் தான் கிர்காவ் கடற்கரையில் கரைக்கப்பட்டது. ஆனந்த சதுர்த்தியையொட்டி 2 நாட்களாக சுமார் 40 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.