மராத்தி பெயர் பலகை வைக்காதவர்கள் மீது நடவடிக்கை- தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

மராத்தி பெயர் பலகை வைக்க கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2022-07-05 16:28 GMT

மும்பை,

மராத்தி பெயர் பலகை வைக்க கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

ஓட்டல் சங்கம் மனு

மும்பை மாநகராட்சி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களும் பெயர் பலகையை மராத்தியில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த மே மாதம் 31-ந் தேதிக்குள் மராத்தி பெயர் பலகையை வைக்க கடைகளுக்கு கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தினர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர்.

அதில் " பெயர் பலகை மாற்றம் தொடர்பான சட்டத்திருத்தத்தில் காலக்கெடு எதுவும் கூறப்படவில்லை. ஆனால் மாநகராட்சி செய்திதாள் விளம்பரம், நோட்டீஸ்களில் மே 31-ந் தேதிக்குள் மராத்தியில் பெயர் பலகையை வைக்க வேண்டும் என கூறியுள்ளது. நாங்கள் பெயர் பலகையை மாற்ற தயாராக உள்ளோம். ஆனால் அதற்கு அதிக செலவாகும். எனவே பெயர் பலகையை மாற்ற மேலும் 6 மாதங்களுக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை பெயர் பலகை மாற்றாத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் " என கூறப்பட்டு இருந்தது.

தடை விதிக்க மறுப்பு

இந்த மனு நீதிபதிகள் தனுகா, செவ்லிகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் மனு குறித்து பதில் அளிக்க காலஅவகாசம் கேட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் மனுவை வருகிற 8-ந் தேதி விசாரிப்பதாக கூறினர். மேலும் மராத்தி பெயர் பலகை வைக்காத கடைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்