கட்சி கூட்டத்தில் அவுரங்கசீப் ஆதரவு கோஷம்: பொய் செய்தியை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடருவேன் - அசாதுதீன் ஓவைசி கூறுகிறார்

எம்.ஐ.எம். கட்சி கூட்டத்தில் அவுரங்கசீப்புக்கு ஆதரவாக கோஷமிட்டதாக பொய் செய்தியை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன் என்று அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

Update: 2023-06-25 19:45 GMT

அமராவதி, 

எம்.ஐ.எம். கட்சி கூட்டத்தில் அவுரங்கசீப்புக்கு ஆதரவாக கோஷமிட்டதாக பொய் செய்தியை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன் என்று அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

பதற்றமான சூழ்நிலை

புல்தானா மாவட்டம் மல்காபூரில் சமீபத்தில் எம்.ஐ.எம். கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பேரணியில் முகலாய மன்னன் அவுரங்கசீப்புக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "இதுபோன்ற அவுரங்கசீப்பின் வாரிசுகள் மாநிலத்தில் திடீரென்று எங்கிருந்து வந்தார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து யோசித்துக்கொண்டு இருக்கிறேன். மராட்டியம் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் அவுரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் இல்லை. இதுபோன்ற கோஷங்களை யார் எழுப்புகிறார்கள், யாருடைய உத்தரவின் பேரில் இப்படி செயல்படுகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்" என்றார்.

வழக்குப்பதிவு செய்வேன்...

இந்தநிலையில் எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "தங்கள் பேரணியில் அவுரங்கசீப்புக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி உள்ளனர்" என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

மல்காபூரில் நடந்த பேரணியின்போது போலீசார் அங்கு இருந்தனர். நீங்கள்(செய்தி ஊடகங்கள்) பொய்களை ஒளிபரப்புகிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களை எவ்வளவு வெறுப்பீர்கள்? பொய் செய்தி வெளியிட்ட உங்கள் மீது நான் வழக்குப்பதிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்