தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்; 5 பேர் கும்பல் கைது

தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-02 19:15 GMT

புனே, 

தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரில் கடத்தல்

புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். தொழில் அதிபரான இவர், நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்றபோது, காரில் வந்த மர்மகும்பல் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம், செல்போனை பறித்துக்கொண்டனர். இதன் பின்னர் உன்னை உயிருடன் விட வேண்டுமெனில் ரூ.1 கோடி தரவேண்டும் என மிரட்டி உள்ளனர். இதற்கு பணம் தருவதாக கூறிய தொழில் அதிபர் சஞ்சய் முதல் கட்டமாக ரூ.12 லட்சம் தருவதாக கும்பலிடம் தெரிவித்தார். இதன் பின்னர் அக்கும்பல் அவரை விடுவித்து பணத்தை கொண்டு வருமாறு தெரிவித்தது. இது பற்றி தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்தார்.

5 பேர் கைது

போலீசார் அக்கும்பலை பொறி வைத்து பிடிக்க திட்டம் போட்டனர். இதன்படி தொழில் அதிபர் சஞ்சய் கும்பலை தொடர்பு கொண்டு பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தார். இதற்கு அக்கும்பலினர் அங்குள்ள குப்பை கிடங்கில் பணத்தை வைக்குமாறு தெரிவித்தனர். இதன்பேரில் சஞ்சய் பணத்தை குப்பை கிடங்கில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் அந்த பணப்பையை எடுக்க வந்த ஆகாஷ் புரே(வயது24) என்பவரை அங்கு மறைந்திருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வினோத் காக்டே, யுவராஜ் சர்வதே, அஜய் நந்து, நவ்நாத் என மேலும் 4 பேர் பிடிபட்டனர். இதையடுத்து பிடிபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இந்த கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்