உத்தரவாத திட்டத்திற்காக மாதம் ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு-மந்திரி போசராஜு தகவல்

குடகு மாவட்டத்திற்கு மாதம் தோறும் உத்தரவாத திட்டத்திற்காக ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி போசராஜு கூறியுள்ளார்.

Update: 2023-10-17 18:45 GMT

குடகு:-

உத்தரவாத திட்டம்

குடகு மாவட்டத்தில் ஜனதா தரிசன நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி போசராஜு தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அன்னபாக்யா, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், கிரக லட்சுமி ஆகிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவாத திட்டங்களால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை.

இந்த உத்தரவாத திட்டங்களால் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். வளர்ச்சி திட்டப்பணிகளில் இருந்து இந்த உத்தரவாத திட்டத்திற்கு செலவு செய்யவில்லை. அதற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குடகு மாவட்டத்தில் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 391 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ.6½ கோடி நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சக்தி திட்டத்திற்கு ரூ.10½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இதேபோல அன்னபாக்யா திட்டத்திற்கு ரூ.4½ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் மொத்தம் ரூ.28 கோடி உத்தரவாத திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

டிசம்பரில் தொடக்கம்

இதேபோல பட்டதாரி இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டம் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக சென்றடைகிறது. வங்கி கணக்கிற்கே உதவி தொகைகள் செலுத்தப்படுகிறது. இதனால் இடைத்தரகர்கள் குறைந்துள்ளனர்.

குடகில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் மூலம் அறிவியல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மடிகேரியில் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி இந்த அறிவியல் மையம் கட்டும் பணிகள் தொடங்கப்படுகிறது. ஒரு சில அரசின் திட்டங்கள் வந்தடையவில்லை என்று கூறுகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசின் திட்டங்கள் சரியாக வந்தடையும். அதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து கலெக்டர் வெங்கடராஜா பேசியதாவது:-

இந்த ஜனதா தரிசனம் நிகழ்ச்சி பொதுமக்களின் தேவைகளை அறிந்து, நேரடியாக வந்து அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்தவர்களுக்கு வீடு தேடி வந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை பயன்படுத்தி கொண்டு தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக கூறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்