பிரதமர் வருகையையொட்டி அமைத்த சாலை சேதம் ஒப்பந்ததாரருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

பெங்களூருவில் பிரதமர் வருகையால் போடப்பட்ட சாலை பெயர்ந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-06-25 17:33 GMT

பெங்களூரு:

பிரதமர் அலுவலகம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ந் தேதி பெங்களூரு வந்தார். இதையொட்டி, பெங்களூருவில் ரூ.11½ கோடி செலவில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டு இருந்தது. மாநகராட்சி சார்பில் இந்த பணிகள் நடந்திருந்தது. இந்த நிலையில், பெங்களூரு பல்கலைக்கழகம் அருகே போடப்பட்ட தார்சாலை பெயர்ந்து சேதமடைந்து, பள்ளமாக மாறியது. இதையடுத்து, புதிதாக போடப்பட்ட தார்சாலை பெயர்ந்தது மற்றும் தரமற்ற சாலை போட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தார்சாலை பெயர்ந்தது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திற்கு உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் தரமற்ற தார்சாலை அமைத்த விவகாரம் குறித்து 3 என்ஜினீயர்களுக்கு மாநகராட்சி நோட்டீசும் அனுப்பி வைத்திருந்தது.

ஒப்பந்ததாரருக்கு அபராதம்

இந்த நிலையில், தார்சாலை பெயர்ந்த விவகாரத்தில் தரமற்ற சாலை அமைத்ததாக கூறி, ஒப்பந்ததாரரான ரமேசுக்கு ரூ.3 லட்சத்தை பெங்களூரு மாநகராட்சி அபராதமாக விதித்துள்ளது. அதே நேரத்தில் தார் பெயர்ந்து வந்த இடத்தில், மீண்டும் சாலை அமைக்கும்படியும் ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, தார் பெயர்ந்து வந்த பகுதி சரி செய்யப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில், பிரதமர் வருகையால் போடப்பட்ட சாலை தரமற்றது இல்லை என்றும், தார் பெயா்ந்து வந்த இடத்தில் தண்ணீர் கசிவு இருந்ததால் மட்டுமே பெயர்ந்து வந்திருப்பதாகவும் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரவீந்திரா தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், என்ஜினீயர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்