போலீஸ் தேர்வு முறைகேடு வழக்கு: சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் தேர்வு முறைகேடு வழக்கில் சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள ஸ்ரீதர், சரத்குமார், திலீப்குமார், பிரவீன்குமார், சூர்யநாராயணா, ரகுவீர் ஆகியோர் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுபோல இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவீன் பிரசாத் என்பவர் முன்ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் நடந்து வந்தது. மனுக்கள் மீதான இறுதி விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 6 பேரின் ஜாமீன், சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.