ரூ.1,500 கோடி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக அடிக்கல் நாட்டுகிறார்: மந்திரி நாராயண கவுடா பேட்டி

மண்டியா கே.ஆர்.பேட்டையில் ரூ.1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று மண்டியா வர உள்ளதாக விளையாட்டு துறை மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-20 17:02 GMT

மண்டியா:

ரூ.1,500 கோடியில் திட்டம்

மண்டியா டவுனில் நேற்று விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்டியா கே.ஆர். பேட்டையில் ரூ.1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 21-ந் தேதி(இன்று) மண்டியா வருகிறார். இவருடன் முன்னாள் முதல் -மந்திரி எடியூரப்பா உள்பட மந்திரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இது கே.ஆர் பேட்டை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. முதற்கட்டமாக சுமார் 17 ஏக்கர் நிலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்படுகிறது.

வறுமையில்லா கிராமம்

இதற்கு அடுத்தப்படியாக ஏரி, குளங்களுக்கு முதல்-மந்திரி நீர் திறந்துவிடுகிறார். மேலும் அம்ருதா திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 316 கிராமங்களில் 182 வருவாய் கிராமங்கள் வறுமையில்லாதவை என்று அறிவிக்கப்பட இருக்கிறது.

மீதமுள்ள 134 கிராமங்கள் 6 மாதங்களில் வறுமையில்லாத கிராமமாக மாற்றப்படும். 3 ஆயிரம் பேருக்கு இலவச வீடு, 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை, 15 ஆயிரம் பேருக்கு கண் பரிசோதனை, 3 ஆயிரம் பேருக்கு கண் சிகிச்சை, 5 ஆயிரம் பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு தீவிரம்

இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் வருகையால் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த குறைவு ஏற்படகூடாது என்று மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்