தசரா யானைகளுக்கு பீரங்கி வெடி சத்த பயிற்சி

தசரா யானைகளுக்கு பீரங்கி வெடி சத்த பயிற்சி கண்காட்சி வாரிய வளாகத்தில் நடந்தது.

Update: 2023-10-11 22:04 GMT

மைசூரு:-

தசரா விழா

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியைெயாட்டி தசரா விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை தசரா விழா நடக்கிறது. இந்த விழாவில் 14 யானைகள் கலந்து கொள்கின்றன. அந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் நடைபயிற்சி, பாரம் சுமந்து செல்லும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று யானைகளுக்கு பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது. தசரா கண்காட்சி வாரிய வளாகம் பின்புறம் 14 யானைகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்தன. மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் பாத்தேடு, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எதிரே 7 பீரங்கிகள் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் பீரங்கியில் வெடிகுண்டை வைத்து வெடித்தனர்.

வெடிகுண்டு சத்தம்

வெடிகுண்டு சத்தத்திற்கு மற்றும் அதிலிருந்து வரும் புகை மற்றும் வாசனைக்கு யானைகள் மிரளாமல், மயக்கம் அடையாமல் இருக்க இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் 2 நாட்கள் பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 7 பீரங்கிகள் மூலமாக 3 தடவை வெடி வெடித்து மொத்தம் 21 தடவை வெடித்தது. இதனால் அந்தப் பகுதி புகை மண்டலமாக மாறி இருந்தது.

வெடி வெடித்ததும் யானைகளை பீரங்கிகள் இருக்கும் இடத்திற்கு சென்று வாசனை தாங்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவைகளுடன் போலீஸ் குதிரைகளும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டன. தங்க அம்பாரி சுமந்து செல்லும் அபிமன்யு யானை உள்பட 13 யானைகளும் வெடிசத்தம் கேட்டு கம்பீரமாக நின்றிருந்தன. ஆனால் புதியதாக வந்துள்ள ரோகிதா யானை மட்டும் பீரங்கி வெடி சத்தத்திற்கு பயந்து கொஞ்சம் அலறியது. பின்னர் பாகன்கள் அந்த யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

3 நாட்கள் பயிற்சி

அடுத்த 3 நாட்கள் கழித்து 2-ம் கட்டம் மற்றும் 3-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் பாத்தேடு தெரிவித்துள்ளார். பீரங்கி பயற்சியை ஏராளமான மக்கள் கண்டு களித்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்