அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு தலைமை என்ஜினீயராக நியமிக்க கோரிய முதியவரின் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு தலைமை என்ஜினீயராக நியமிக்க கோரிய முதியவரின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் வசித்து வருபவர் ரகுநாத் (வயது 71). இவர் இந்தூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது தார்வார் ஐ.ஐ.டி. ஒப்பந்த அடிப்படையில் அவர் தலைமை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணியின் தலைமை என்ஜினீயராக தன்னை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ரகுநாத் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி எஸ்.ஜி.பண்டித் முன்னிலையில் நடந்து வந்தது.
மனு மீதான இறுதி விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் உமேஷ் கூறுகையில், எனது மனுதாரர் ஐ.ஐ.டி.யில் தலைமை என்ஜினீயராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இதனால் அவரை ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அப்போது நீதிபதி கூறுகையில், இந்திய அரசியல் அமைப்பு 12-வது பிரிவின் கீழ் அறக்கட்டளை என்பது மாநிலம் அல்ல. மனுதாரருக்கு தலைமை என்ஜினீயராக நியமிக்க கேட்க உரிமை இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.