வீரசைவ-லிங்காயத் சமூகத்தை உடைக்க முயற்சித்ததால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது-ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
வீரசைவ-லிங்காயத்து சமூகத்தை உடைக்க முயற்சித்ததால் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது என்று ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாவணகெரே:
முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வீரசாவர்க்கர் குறித்து சித்தராமையா தவறாக பேசுகிறார். வீரசாவர்க்கர் சுதந்திர போராட்டத்தில் போராடியதற்காக தான் அவரது பெயரின் முன்னால் வீர என்ற பெயர் சேர்ந்துள்ளது என்பதை சித்தராமையா புரிந்து கொள்ள வேண்டும். வீரசாவர்க்கர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது பற்றி சித்தராமையாவுக்கு தெரியவில்லையா?.
அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது வீரசைவ-லிங்காயத் சமூகத்தை உடைக்க முயற்சி செய்தார். இதற்காக அவர் பெரும் முயற்சியை மேற்கொண்டார். அதன் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதற்காக ரம்பாபுரி மடாதிபதியிடம் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் வருத்தம் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார். அவரை நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொய் பேசுவதையே அவர் வழக்கமாக கொண்டுள்ளார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட மாட்டார். சட்டசபை தேர்தல் வரை அவர் பதவியில் நீடிப்பார். அவர் மாற்றப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.