மண்டியா தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா உதவியாக இருந்தது-சுமலதா எம்.பி. பேட்டி
மண்டியா தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா உதவியாக இருந்தது என்று சுமலதா எம்.பி தெரிவித்துள்ளார்.
மண்டியா:
மண்டியா மாவட்டத்தில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலையில் கொதிகலன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்ந நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மண்டியா தொகுதி எம்.பி. சுமலதா நிருபர்களிடம் கூறியதாவது:- மண்டியா எம்.பியாக 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நான் தேர்தலில் போட்டியிட்டபோது மண்டியா மக்களிடம் மைசுகர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தேன். அதன்படி இன்று முதற்கட்டமாக கொதிகலன் திறக்கப்பட்டுள்ளது.
இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம் இல்லை. பொதுமக்களின் போராட்டத்தால் நடந்தவை. இதுதான் அம்பரீசின் கனவும்.. இதற்காக விவசாயிகள் பல ஆண்டுகள் போராடினர். மண்டியா மக்களுக்கு இது ஒரு வரலாற்று தினம். மைசுகர் சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு பா.ஜனதா கட்சி மற்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் பல்வேறு உதவிகள் செய்துள்ளனர். அவர்கள் உதவிகள், என்னால் மறக்க முடியாது. மண்டியாவில், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா கட்சி உதவியாக இருந்தது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மந்திரி கோபாலய்யா கூறியதாவது:- மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலை விவசாயிகளின் முதுகெலுப்பாக உள்ளது. விரைவில் இந்த ஆலை விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும். முதற்கட்டமாக கொதிகலன் திறக்கப்பட்டுள்ளது. இந்த சா்க்கரை ஆலைக்கு தேவையான கரும்புகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றார்.