பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.51 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்;தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.51 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-01 16:17 GMT

பெங்களூரு:

திருப்பத்தூரை சேர்ந்தவர்கள்

பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரெயில்வே பேரலல் ரோட்டில் வந்த ஒரு கார், போலீசாரை பார்த்ததும் பின்னால் திரும்பி செல்ல முயன்றது. உடனே சந்தேகம் அடைந்த போலீசார், விரட்டி சென்று அந்த காரை வழிமறித்து நிறுத்தினாா்கள். காரில் 2 பேர் இருந்தனர். பின்னர் காரில் சோதனை நடத்தப்பட்டது. அந்த காரில் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காரில் இருந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் தமிழ்நாடு திருப்பத்தூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25), சந்திரா (26) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேர் மற்றும் கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து, ஆந்திர மாநிலம் கடப்பாவில் வனப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு செம்மரக்கட்டைகளை வாங்கி உள்ளனர்.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்

அந்த செம்மரக்கட்டைகளை சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டி தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. செம்மரக்கட்டைகளை விற்பனை செய்வதற்காக 3 கார்களையும் 2 பேரும் திருடி இருந்தார்கள். கைதான 2 பேரிடம் இருந்து ரூ.51 லட்சம் மதிப்பிலான 453 கிலோ செம்மரக்கட்டைகள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் விக்னேஷ், சந்திராவின் கூட்டாளிகளான காளியப்பன், சிவா, அஸ்லாம், மவுலா ஆகிய 4 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கைதான 2 பேர் மீதும் சேஷாத்திரிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்