மிரட்டி பணம் வசூலித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி இடைநீக்கம்

பெங்களூருவில் கேரள மாநில கார் டிரைவரை மிரட்டி பணம் வசூலித்ததாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து, இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-27 15:26 GMT

பெங்களூரு:

ரூ.2,500 வசூல்

பெங்களூரு அல்சூர்கேட் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக மகேஷ் மற்றும் ஏட்டுவாக கங்காதரப்பா பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேவாங்க ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது கேரள மாநில பதிவு எண்ணை கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை வழிமறித்து உதவி சப்-இன்ஸ்பெகடர் மகேஷ், கங்காதரப்பா சோதனை நடத்தினார்கள். அந்த காரில் கை கழுவுவதற்கான வசதி செய்யப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

பின்னர் கார் டிரைவர் சந்தோசிடம், ஆவணங்களை கேட்டு 2 பேரும் சரிபார்த்துள்ளனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லை என்றும், காரில் கை கழுவும் வசதி வைத்திருப்பதற்காக ரூ.20 ஆயிரத்தை கோர்ட்டில் அபராதமாக செலுத்த வேண்டும் என்று டிரைவர் சந்தோசிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் டிரைவரை மிரட்டி ரூ.2,500-யை உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் கங்காதரப்பா வாங்கி கொண்டனர்.

2 போலீசார் பணி இடைநீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு, இ-மெயில் மூலமாக சந்தோஷ் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மகேஷ், கங்காதரப்பா மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சந்தோசை மிரட்டி ரூ.2,500-யை மகேசும், கங்காதரப்பாவும் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ், தலைமை ஏட்டு கங்காதரப்பாவை பணி இடைநீக்கம் செய்து, இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்