ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபைர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு

அனைத்து எப்.ஐ.ஆர்.களையும் ரத்து செய்யக் கோரி சுபைர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

Update: 2022-07-18 12:45 GMT

புதுடெல்லி,

ஆல்ட் நியூஸ்' எனும் இணை நிறுவனர் முகமது சுபைர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மத உணர்வை தூண்டியதாக கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தான் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முகமது ஜுபைர் மீது சீதாபூர் போலீசார் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். ஜூலை 4ம் தேதி முகமது ஜூபைர் வழக்கு தொடர்பாக சீதாபூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சீதாபூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் கடந்த 8ம் தேதி அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 5 நாள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் டுவிட்டரில் கருத்து பதிவிடக்கூடாது என நிபந்தனை விதித்தது.ஆனால், இந்த உத்தரவு டெல்லி போலீசாரின் வழக்குக்கு பொருந்தாது என கூறப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக உ.பி.யில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர்.களையும் ரத்து செய்யக் கோரி முகமது சுபைர் தாக்கல் செய்த மனு இன்று அவசர விசாரணைக்கு வந்தது.

அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், 'ஜுபைர் மீது வழக்குகளை தாக்கல் செய்ய மக்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எதிராக செயல்படும் ஒரு பத்திரிகையாளருக்கு எதிராக குற்றவியல் சட்ட இயந்திரம் இப்படித்தான் செயல்படுத்தப்படுமா? அவரைக் கொன்றுவிடுவதாக நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், ஆனால் உ.பி காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்று அவர் வாதிட்டார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில், ஒவ்வொரு முறை அவர் ஜாமீன் பெறும் தருணத்தில், புதிய எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிகிறது.

உ.பி.யில் அவர் மீதான ஆறாவது வழக்கில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹத்ராஸ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீதான வழக்குகளில் விசாரணை, வரும் புதன்கிழமை நடைபெறும். அதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரப் பிரதேச காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அடுக்கடுக்கான எப்.ஐ.ஆர்.கள் குறித்தும் கோர்ட்டு கவலை தெரிவித்தது. சுபைரின் வழக்கை ஜூலை 20-ம் தேதி விரிவாக விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டது.

இதன்மூலம், இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுபைருக்கு இரண்டு நாட்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்