அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு யுவராஜ் சிங் இரங்கல்
அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,
அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்
வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
"அசாம் வெள்ளத்தில் உயிர் இழந்தவர்களுக்கு என்னுடையை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் நிலைமையைக் சரி செய்து, வீடுகளை விட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அதிகாரிகள் நிவாரணம் வழங்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.