தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி
ஜனாதிபதி மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
புதுடெல்லி,
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா ஒன்றுபட்ட தேசமாக ஒரு முற்போக்கான தேசமாக இருப்பதால், தேசிய ஒருமைப்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்கு சுதந்திரப் போராட்டத்தின் போது காணப்பட்ட தேசபக்தியை தற்போதைய தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதில் நமது இளைஞர்களின் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்த நாட்டின் 75 சுதந்திர தின கொண்டாட்டம் ஒரு பொன்னான வாய்ப்பு.
தற்போதைய தலைமுறையினர் நாளைய தலைவர்களாக இருப்பார்கள், எனவே, இந்தியாவின் கனவுகள் மற்றும் தொலைநோக்கு கடமை மற்றும் பொறுப்புணர்வை நாம் இப்போது அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். நமது தேசத்தின் கனவுகளை நனவாக்க பழைய நுட்பங்களை ஒருவர் நம்ப முடியாது, தொழில்நுட்பப் புரட்சி மிகப்பெரிய அளவில் மாற்றத்தின் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது.
வரவிருக்கும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மக்களவை சபாநாயகர், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.