அடைக்கலம் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் - உதவியாக இருந்த அக்காள் கைது
அடைக்கலம் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் சிறைவைத்து பாலியல் வன்கொடுமை சம்பவம் ராமநகரில் நடந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராமநகர் (மாவட்டம்) டவுன் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண், தனது பெற்றோர் மற்றும் தன்னுடைய அண்ணனுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறினார்.
அவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக ராமநகர் டவுன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரீத்தி என்ற பெண், இந்த இளம்பெண்ணிடன் அன்பாக பேசினார்.
அப்போது தான் பெற்றோரை இழந்தவள் என்றும், காப்பகம் ஒன்றில் தங்கி இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் தன்னுடன் வந்து தங்கலாம் என்றும் பிரீத்தி இளம்பெண்ணிடம் கூறினார். அவர் அடைக்கலம் கொடுப்பதாக கூறியதை நம்பிய அந்த இளம்பெண், பிரீத்தியுடன் சென்றார்.
அப்போது பிரீத்தி ராமநகர் டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்று சிறைவைத்தார். இதனால் அந்த இளம்பெண் பதறிப்போனார். இதையடுத்து அங்கு வந்த பிரீத்தியின் தம்பி, அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணை வீட்டில் சிறை வைத்தே பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றாலோ அல்லது நடந்த சம்பவங்களை வெளியே கூறினாலோ உனது அண்ணனை கொலை செய்து விடுவோம் என்று பிரீத்தியும், அவரது தம்பியும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை மிரட்டி வந்துள்ளனர். இதற்கிடையே அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து அவருக்கு பிரீத்தி மருந்து, மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பும் செய்துள்ளார். இந்த நிலையில் பிரீத்தி மற்றும் அவரது தம்பியின் பிடியில் இருந்து தப்பிய அந்த இளம்பெண், நேற்று ராம்நகர் டவுனில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பெண்கள் அமைப்பினருடன் சேர்ந்து சென்றார்.
அங்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் கூறிய இளம்பெண், பிரீத்தி மீதும், அவரது தம்பி மீதும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரீத்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது தம்பியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.