ஆயுள் தண்டனை ரத்து: 3 பேர் கொலை வழக்கில் வாலிபர் விடுதலை- தார்வார் ஐகோர்ட்டு தீர்ப்பு

3 பேர் கொலையில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்த தார்வார் ஐகோர்ட்டு, அவரை விடுதலை செய்தது தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2022-06-23 21:58 GMT

பெலகாவி:

3 பேர் கொலை

பெலகாவி மாவட்டம் குவெம்பு நகரை சேர்ந்தவர் ரீனா மலகட்டி. இவருக்கு திருமணம் ஆகி ஆதித்யா, சத்யா என்ற 2 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி வீட்டில் ரீனா மற்றும் அவரது 2 குழந்தைகளும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இந்த கொலை சம்பவம் பற்றி பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் ரீனாவின் சகோதரர் ஹேமந்த் தாலல் போலீசில் அளித்த புகாரில், ரீனாவுக்கும், பக்கத்துவீட்டை சேர்ந்த பிரவீன் பட்டுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், கள்ளக்காதல் விவகாரத்தில் பிரவீன் பட் தான் ரீனாவையும், குழந்தைகளையும் கொன்றதாக கூறியிருந்தார்.

வாலிபர் விடுதலை

அதன்பேரில் போலீசார் பிரவீன்பட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக பெலகாவி செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுள்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து பிரவீன்பட் சார்பில் தார்வாரில் உள்ள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.முடகல், எம்.ஜி.கமல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது. அதாவது இந்த வழக்கில் பிரவீன் பட் மீதான கொலை குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாகவும், எனவே அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை ரத்து செய்வதாகவும், இந்த கொலை வழக்கில் இருந்து பிரவீன்பட்டை விடுதலை செய்தும் நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்