நிலத்தகராறில் வாலிபர் படுகொலை; 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
நிலத்தகராறில் வாலிபரை கொன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
சிவமொக்கா;
நிலத்தகராறு
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா சிக்கனகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 23). இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத்(26) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி மீண்டும் ஹரீசுக்கும், மஞ்சுநாத்துக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஒலேஹொன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தானவாடி கிராமத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மஞ்சுநாத் அழைத்தார். இருவரும் சுமுகமாக பேசி நிலப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதை நம்பிய ஹரீஷ், தானவாடி கிராமத்திற்கு சென்றார்.
கத்தியால் குத்திக்கொலை
அங்கு மஞ்சுநாத், தனது உறவினர்கள் அம்பரீஷ்(21), கவிதா(35), ராமகட்டே கிராமத்தைச் சேர்ந்த ரூபா(32) ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் மஞ்சுநாத்துக்கு ஆதரவாக ஹரீசிடம் பேசினர்.
இதில் கோபம் கொண்ட ஹரீஷ் நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறி ஆவேசமாக பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஹரீசை, மஞ்சுநாத் மற்றும் அவரது உறவினர்கள் சரமாரியாக தாக்கி அடித்து, உதைத்தனர்.
பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ஹரீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இக்கொலை சம்பவம் குறித்து பத்ராவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத், அவரது உறவினர்களான அம்பரீஷ், கவிதா, ரூபா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது சிவமொக்கா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆயுள் தண்டனை
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி சசிதர் தீர்ப்பு கூறினார். அவர், வழக்கில் குற்றவாளிகளான மஞ்சுநாத், அம்பரீஷ், கவிதா, ரூபா ஆகிய 4 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து போலீசார் மஞ்சுநாத், அம்பரீசை சிவமொக்கா மத்திய சிறையிலும், கவிதா மற்றும் ரூபாவை சிவமொக்காவில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.