நந்தி மலையில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

உபேந்திராவின் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, நந்தி மலையில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-14 20:57 GMT

பெங்களூரு:

கடிதம் சிக்கியது

பெங்களூரு அருகே நந்தி மலை அமைந்துள்ளது. ஆனால் அது சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது ஆகும். இந்த நிலையில் நந்தி மலை அடிவாரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதையடுத்து நத்தி மலை நிர்வாகத்தினர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை அங்கு வந்து நிறுத்திவிட்டு மலைக்கு சென்றது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த வாலிபர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து மலைப்பகுதியில் ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது திப்பு முனை பகுதியில் ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தனர். அதில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய ஊழியர்கள் உடனடியாக நந்தி மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடல் மீட்பு

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த கடிதத்தில், நான் சந்தோஷமாக சாக போகிறேன். தற்போதுள்ள அரசியல் முறை சரியாக இல்லை. எனவே மக்கள் அனைவரும் உபேந்திராவின் பிரஜகியா கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும், அந்த வாலிபர் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் மலை அடிவாரத்தில் வாலிபரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட நேரத்திற்கு பிறகு வாலிபர் உடல் கிடைத்தது. உடலை மீட்டு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா அம்பரஹள்ளியை சேர்ந்த அருண்(வயது 20) என்பது தெரிந்தது.

நண்பர்களுடன் தங்கி...

அவர் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியில் நண்பர்களுடன் தங்கி, தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சு வேலை செய்து வந்ததும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு நந்தி மலைக்கு வந்ததும் தெரிந்தது.

அங்கு வந்த அவர் திப்பு முனை பகுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். ஆனால் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற முழுவிவரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்