கேரளாவின் இளம் எம்.எல்.ஏ.வை கரம் பிடித்த இந்தியாவின் இளம் மேயர்

கேரளாவின் இளம் எம்.எல்.ஏ.வான சச்சின் தேவ் மற்றும் இந்தியாவின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரன் திருமணம் இன்று எளிமையான முறையில் நடந்தது.

Update: 2022-09-04 14:07 GMT



திருவனந்தபுரம்,



கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுசேரி தொகுதியின் இளம் எம்.எல்.ஏ. சச்சின் தேவ். இவர், இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராகவும் சச்சின் தேவ் உள்ளார்.

இதேபோன்று, தனது 21-வது வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்றவர் ஆர்யா ராஜேந்திரன். இதனால், இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பாலசங்கம் என்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் குழந்தைகளுக்கான அமைப்பிலும் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் நண்பர்களாகவும் இருந்தவர்கள். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, இவர்கள் இருவரின் திருமணம் இன்று காலை எளிமையான முறையில் நடந்தது. திருமணத்திற்கு வருகிறவர்களிடம் இருந்து பரிசு பொருட்களை நாங்கள் வாங்கமாட்டோம் என இருவரும் வெளிப்படையாக கூறினர். ஒருவேளை யாரேனும் நன்கொடை கொடுக்க விரும்பினால், அவர்கள் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அல்லது கேரளாவின் சில அனாதை இல்லங்களுக்கு அவற்றை வழங்கும்படி கேட்டு கொண்டனர்.

இந்த திருமண விழாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் உள்பட அனைத்து மூத்த தலைவர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கேரள மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலர்களும் விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்