அதிமுக தாக்கல் செய்த ரிட் மனு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருத்தப்பட்ட கட்சி விதிகளை பதிவேற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனு மீது 10 நாட்களுக்குள் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-04-12 05:35 GMT

புதுடெல்லி,

அ.தி.மு.க. விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்கக்கோரியும், அதை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றக்கோரியும் அ.தி.மு.க. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த மனு  நீதிபதி புருஷிந்திர குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.

அவர் கூறும்போது, 'அ.தி.மு.க. கட்சி விதிகளில் கடந்த ஜூலை 11-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கக்கோரி அளித்த விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல் சித்தாந்த் குமார், 'கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதில் இறுதி முடிவு எடுக்க 10 நாட்கள் ஆகும்' என கூறினார்.

உடனே முகுல் ரோத்தகி, 'இந்த மனு மீது தேர்தல் கமிஷன் திங்கட்கிழமைக்குள் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும். இடையீட்டு மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்' என வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, 'இந்த விவகாரத்தில், தேர்தல் கமிஷனை கட்டாயப்படுத்த முடியாது. முடிவு எடுக்க வேண்டுமென கேட்கவே முடியும்' என தெளிவுபடுத்தினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், 'இந்த விவகாரம் தொடர்பாக சிவில் வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. சென்னையில் நடைபெற்ற விவகாரத்துக்கு டெல்லியில் எப்படி வழக்கு தொடர முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு நிவாரணம் அளிக்கும் முன் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்தையும் கேட்க வேண்டும்' என வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, 'ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தையும் கேட்க தேர்தல் கமிஷன் கடமைப்பட்டுள்ளது. அவரும் கோரிக்கை மனு அளிக்கலாம். அது தொடர்பாக இந்த நீதிமன்றம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை' என்று கூறினார்.பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தேர்தல் கமிஷனின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த விண்ணப்பத்தின் மீது 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, ரிட் மனுவை முடித்து வைக்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்