உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-18 19:58 GMT

image courtesy: FIFA World Cup twitter

புதுடெல்லி,

32 நாடுகள் பங்கேற்ற 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதின.

இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த நிலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்த போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும்! உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள்! இந்த கால்பந்து தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், "உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் உற்சாகமான செயல்திறனுக்காக பிரான்சுக்கு வாழ்த்துகள்! அவர்கள் இறுதிப் போட்டியில் தங்கள் திறன் மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்தனர்" என்று பிரான்சு அணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்