தொழிலாளி கல்லால் அடித்து கொலை
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கமகளூரு:-
கல்லால் தாக்கி
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா கவுரிபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 30). தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள மதுபான கடையில் மது விருந்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் மது அருந்தி உள்ளனர். இந்த சமயத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ராமகிருஷ்ணாவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பில் ஈடுபட்டனர். மதுபோதையில் இருந்ததால், அவர்கள் ஒன்று சேர்ந்து ராமகிருஷ்ணாவை கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும், ஆத்திரம் தீராததால் அவர்கள் ராமகிருஷ்ணாவை கல்லால் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து தலைமறைவானது.
திட்டமிட்ட கொலை
இதுகுறித்து மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஜகலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், ராமகிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமகிருஷ்ணா தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது, முன்விரோதத்தை காரணம் காட்டி அவரது நண்பர்கள் திட்டமிட்டு அவரை கொலை செய்தது தெரிந்தது.
பரபரப்பு
இதற்கிடையே தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜகலூர் போலீசார், கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.