உலக்கையால் அடித்து தொழிலாளி கொலை; மனைவி-மகன் கைது
உலக்கையால் தொழிலாளியை அடித்து கொன்ற மனைவி-மகன் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு: மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹதினாரு மோளே கிராமத்தை ேசர்ந்தவர் சண்ணமாத செட்டி (வயது 50). தொழிலாளி. இவருக்கு சிக்கம்மா (45) என்ற மனைவியும், சீனிவாசா (23) என்ற மகனும் உள்ளனர். செட்டி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. அவர் தினமும் மதுஅருந்திவிட்டு, வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகனிடம் மதுபோதையில் தகராறு செய்து வந்தார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் சண்ணமாத செட்டி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் சிக்கம்மாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது மகன் சீனிவாசா, செட்டியிடம் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த செட்டி மகன் என்று கூட பார்க்காமல் சீனிவாசாவை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த மனைவி மற்றும் மகன் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து செட்டியை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.
உலக்கையால் தாக்கியதில் செட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக நஞ்சன்கூடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். பின்னர், செட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிக்கம்மா மற்றும் சீனிவாசாவை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.