'2024 தேர்தல் வரை இதே உற்சாகத்துடன் செயல்படுங்கள்' - பா.ஜ.க. தொண்டர்களுக்கு ஜே.பி.நட்டா அறிவுறுத்தல்

தொண்டர்களின் உற்சாகம் பா.ஜ.க.வின் வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்ததாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-20 18:12 GMT

லக்னோ,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதே உற்சாகத்துடன் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் செயல்பட வேண்டும் என பா.ஜ.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கட்சி தொண்டர்களிடம் ஜே.பி.நட்டா பேசியதாவது;-

"கட்சிக்காக பணியாற்றி வரும் நாம் அனைவரும் தேர்தலில் வெற்றி பெறவே விரும்புகிறோம். ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற வாய்ப்புகள் அரிதாகவே இருந்தன. வெற்றி என்பது ஒரு கோட்டையை கைப்பற்றுவது போல், எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிகரமான தலைமையின் கீழ், பா.ஜ.க. மற்றும் அதன் தொண்டர்கள் நிலவரத்தை மாற்றியுள்ளனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், தொண்டர்களின் உற்சாகம் நமது கட்சியின் வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த உற்சாகத்தை 2024 மக்களவை தேர்தல் வரை தக்கவைத்துக் கொள்வது அவசியம்."

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்