மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்- மத்திய மந்திரி கிரிஷன் பால் குர்ஜர் பேச்சு

மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிஷன் பால் குர்ஜர் கூறினார்.

Update: 2022-10-28 21:51 GMT

மண்டியா: மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிஷன் பால் குர்ஜர் கூறினார்.

கருத்தரங்கம்

மண்டியா மாவட்டம் மத்தூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று அரசு சார்பில் பெண்களுக்கான திட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மத்திய மந்திரி கிரிஷன் பால் குர்ஜர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மத்திய அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மாத்ருவந்தனா திட்டம், ஸ்திரிசக்தி திட்டம், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்குதல் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. பெண்கள் இந்த திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

மாத்ருவந்தனா திட்டம்

முன்னாள் திட்டங்களின் பெயரில், பல்வேறு தலைவர்களின் பெயரிலும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அந்த பெயர்களிலேயே நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது பிரதமரின் பெயரில்தான் அனைத்து காசோலைகளும் வழங்கப்படுகின்றன. இது வரவேற்கத்தக்கது. மாத்ருவந்தனா திட்டத்தின் கீழ் முதல் முறையாக கர்ப்பம் அடையும் பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டி ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வேலை இல்லாதோருக்கு வேலை, வீடு கட்டுவதற்காக நிதி உதவி, ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு(பி.பி.எல். கார்டு) ரூ.5 லட்சம் வரை சுகாதார காப்பீடு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு இப்படி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். கேரளாவில் இருந்து வேலை தேடி மத்தூருக்கு வந்த பலர் கேரளாவில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு மூலம் இங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயன்பெற்றுள்ளனர்.

இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டம் ஆகும். இதுபோல் பிரதமரின் திட்டத்தின் கீழ் மத்தூரில் சந்திரகலா என்ற பெண் தொழில் முனைவோர், அக்‌ஷதா என்ற கல்லூரி மாணவி, மமதா என்ற இல்லத்தரசி என ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூரினார்.

கடன் உதவி

பின்னர் அவர் சுய தொழில் தொடங்க பிரதமரின் திட்டத்தின் கீழ் கடன் கேட்டு விண்ணப்பித்த சுவர்ணகவுரி, ஷோபா என்ற பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் உதவி, சந்திரகலா என்ற பெண் கல்குவாரி அமைக்க ரூ.45 லட்சம் கடன் உதவி, ஜீவன் ஜோதி திட்டத்தின் கீழ் குமார், சந்தீப் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான கடன் உதவி ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் யோகேஸ்வர் எம்.எல்.சி., முன்னாள் மந்திரி சோமசேகர், மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்