மற்றொரு ஷரத்தா வாக்கர் சம்பவமா? - டெல்லி மேம்பாலம் அருகே துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்

டெல்லி மேம்பாலம் அருகே பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கிடந்துள்ளது.

Update: 2023-07-12 07:14 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாலத்திற்கு அருகே பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் தலை பாலத்தின் அருகே கிடைத்துள்ளது. பின்னர் பாலத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து பெண்ணின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்தன.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண் யார்? பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடலை பாலத்தின் அருகே வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண் அவரது காதலர் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூர படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு டெல்லியின் பல இடங்களில் வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு பின் இதேபோன்ற கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. தற்போது டெல்லியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்