பச்சிளம் குழந்தையை கிணற்றுக்குள் வீசிக்கொன்ற அத்தை - அதிர்ச்சி சம்பவம்

குழந்தையின் தாயார் வீட்டிற்கு வெளியே துணி துவைத்துக்கொண்டிருந்தார்.

Update: 2024-01-06 08:27 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொன்னியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்தன். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு 1.5 வயதில் ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்த தம்பதியின் உறவினரான பிந்து அதேபகுதியில் வசித்து வருகிறார். குழந்தை ஆனந்திற்கு பிந்து அத்தை முறை ஆகும். பிந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை ஸ்ரீகாந்தனின் வீட்டிற்கு பிந்து வந்துள்ளார். அப்போது, ஸ்ரீகாந்தனின் மனைவி சிந்து வீட்டிற்கு வெளியே துணி துவைத்துக்கொண்டிருந்தார். குழந்தை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்துள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த பிந்து, தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணறு அருகே சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத சமயத்தில் குழந்தையை கிணற்றுக்குள் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிறிது தூரம் சென்ற பிந்துவை அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் சிலர் இடைமறித்து விசாரித்துள்ளனர். அப்போது, குழந்தையை கிணற்றில் வீசிவிட்டதாக அவர்களிடம் பிந்து தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக கிணற்றின் அருகே சென்று தேடியுள்ளனர்.

அப்போது, கிணற்றுக்குள் குழந்தை ஆனந்த் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற பிந்துவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்