தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை

விளைநிலத்திற்கு சென்ற பெண் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-21 20:55 GMT

கலபுரகி:

விளைநிலத்தில்...

கலபுரகி மாவட்டம் யாத்ரமி தாலுகா ஹரனாலா கிராமத்தை சேர்ந்தவர் அனுசுயா(வயது 45). இவருக்கும், விஜயாப்புராவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அனுசுயா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவர் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள விளைநிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் காலையில எழுந்து விளைநிலத்திற்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர்.

நகைக்காக கொலை

அப்போது அவர் விளைநிலத்தின் ஒரு பகுதியில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து அவர்கள் உடனடியாக புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணை நடத்தினர்.

அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் திருடுபோய் இருந்தது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்