திருமணம் செய்யும் வற்புறுத்தியதால் பெண் கொலை
பெங்களூருவில் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் பெண்ணை கொன்று, தற்கொலை நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:-
திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில்...
பெங்களூரு சிங்கசந்திராவில் வசித்து வருபவர் பிரசாந்த். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுனிதா. இவருக்கும், பிரசாந்திற்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிரசாந்தை விட சுனிதா 3 வயது மூத்தவர் ஆவார். ஆனாலும் 2 பேரும் காலித்து வந்தனர். அத்துடன் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் தம்பதி போலபிரசாந்த், சுனிதா வசித்து வந்தனர்.
இதற்கிடையில், கடந்த 6-ந் தேதி பிரசாந்த் வீட்டில் சுனிதா தூக்கில் பிணமாக தொங்கினார். சுனிதா தற்கொலை செய்திருப்பதாக பிரசாந்த் கூறினார். இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சுனிதாவுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில், சுனிதா தற்கொலை செய்யவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கழுத்தை நெரித்து கொலை
இதையடுத்து, பிரசாந்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சுனிதாவை கொலை செய்ததை பிரசாந்த் ஒப்புக் கொண்டார். உடனே போலீசார், அவரை கைது செய்தார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 4 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல 2 பேரும் வாழ்ந்து வந்துள்ளனர். அதே நேரத்தில் தன்னை திருமணம் செய்யும்படி பிரசாந்தை சுனிதா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி நிராகரித்துள்ளார்.
கடந்த 6-ந் தேதியும் இதே விவகாரத்தில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரசாந்த், சுனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு விட்டு தற்கொலை செய்திருப்பதாக பிரசாந்த் நாடகமாடியது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.