பெங்களூரு அருகே யானை தாக்கி பெண் சாவு

பெங்களூரு அருகே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2023-05-27 21:04 GMT

பெங்களூரு:-

காட்டுயானை தாக்கியது

பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குடிசை பகுதியில் வசித்து வந்தவர் மகாதேவம்மா(வயது 48). இவர், நேற்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அந்த பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்திருக்கிறது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை மகாதேவம்மாவை தாக்கியது.

யானையிடம் இருந்து தப்பிக்க அவர் முயன்றும் முடியாமல் போனது. இதனால் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மகாதேவம்மா பரிதாபமாக இறந்து விட்டார். உடனே அங்கிருந்து காட்டு யானை ஓடிவிட்டது. இதற்கிடையில், மகாதேவம்மாவின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு விரைந்து வந்தனர்.

இறுதி சடங்கு...

தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது யானை தாக்கியதால் மகாதேவம்மா உயிர் இழந்தது தெரியவந்தது. ஆனால் இதுபற்றி வெளியே தெரிவிக்காமல் மகாதேவம்மாவின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தும்படி அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. உடனே உரிய நிவாரணம் வழங்க கோரி வனத்துறையினரின் பேச்சுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் பன்னரகட்டா போலீசார் விரைந்து வந்து மகாதேவம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்