பைத்தியம் என்று சொன்னதால் ஆத்திரம்... தாயை கொடூரமாக கொன்ற மனநோயாளி
மனநிலை பாதிக்கப்பட்ட அத்ரிஷ் அடிக்கடி தாயுடன் சண்டைபோட்டு, அவரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குருகிராம்:
டெல்லி அருகே உள்ள குருகிராம் 48-வது செக்டாரைச் சேர்ந்தவர் ரானு ஷா (வயது 59). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன் கணவர் மற்றும் மகன் ஆர்திஷ் (வயது 27) ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் அத்ரிஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர். இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அத்ரிஷ் தனது பெற்றோரிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு ரானு ஷாவுக்கும், அவரது மகன் அத்ரிஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அத்ரிஷ், கத்தியால் தாய் ரானு ஷாவை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர், வீட்டுக்கும் தீவைத்துள்ளார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கதவை உடைத்து ரானு ஷாவை மீட்டனர். கத்திக்குத்து காயம் மற்றும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்ரிஷ் அடிக்கடி தாயுடன் சண்டைபோட்டு, அவரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று நடந்த வாக்குவாத்தின்போது 'பைத்தியம்' என்று கூறி திட்டியதால் ஆத்திரமடைந்த அத்ரிஷ், தாயை கத்தியால் குத்தி கொலை செய்ததும், பின்னர் வீட்டுக்கு தீ வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்தபோது ரானு ஷாவின் கணவர் வெளியில் சென்றிருந்தார். தாயை கொலை செய்த அத்ரிஷை போலீசார் கைது செய்தனர். எனினும், அவரது மனநிலை பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகே விசாரணை நடத்தப்படும்.