பஞ்சாப்பில் அவலம்... போதையில் சாலையில் நிற்க முடியாமல் தள்ளாடிய இளம்பெண்

பஞ்சாப்பில் போதையில் சாலையில் இளம்பெண் ஒருவர் நிற்க முடியாமல் தள்ளாடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Update: 2022-09-12 08:17 GMT

அமிர்தசரஸ்,

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியாக உள்ள நிலையில், போதை பொருள் கடத்தல் அதிகரித்து காணப்படுகிறது.

பஞ்சாப்பில் கடந்த ஏப்ரல் இறுதியில், 6 கிலோ எடை கொண்ட ரூ.30 கோடி மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருளை காரில் கடத்திய சம்பவத்தில் முதுநிலை கல்லூரி மாணவி ஒருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.



 

கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் பெரோஸ்பூர் நகரில் பன்சி கேட் பகுதியருகே, பாலிவுட் பட பாணியில் போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய கார் ஒன்றை துரத்தியபடி, துப்பாக்கியுடன் போலீசார் ஓடிய காட்சிகள் வைரலாகின. இந்த சம்பவத்தில் போதை பொருள் கடத்தல்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப்பில் போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமுடன் ஈடுபடுவோம் என ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கூறி வருகிறது. ஆனால், தொடர்ந்து போதை பொருள் தொடர்புடைய செய்திகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில், அமிர்சரஸ் நகரில் இளம்பெண் ஒருவர் சாலையில் போதையில் நிற்க முடியாமல் தள்ளாடியபடி காணப்படும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை எடுத்தவர் கூறும்போது, வீடியோ பதிவு செய்வதற்கு சற்று முன், பரவச நிலையை அடைவதற்காக அந்த இளம்பெண் ஊசி வழியே போதை பொருளை செலுத்தி கொண்டுள்ளார் என கூறுகிறார்.

பஞ்சாப் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி கிடக்கும் அவல நிலையை அந்த காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இதுபற்றி கிசான் மஜ்தூர் சங்ராஷ் கமிட்டியை சேர்ந்த சர்வான் சிங் கூறும்போது, நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

அதனை முற்றிலும் ஒழிப்போம் என அரசு கூறுகிறது. ஆனால், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே எங்களது கமிட்டியினர் முதல்-மந்திரி பகவந்த் மான் வீட்டின் முன் இன்று போராட்டம் நடத்துவோம் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்