6 மாதங்களில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை பிரதமர் மோடி 2 முறை குறைத்துள்ளார் - ஜேபி நட்டா பெருமிதம்
கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பிரதமர் மோடி 2 முறை குறைத்துள்ளார் என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நேற்று மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவித்தது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறைக்கப்பட்டது. அதேபோல், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்குவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்ததை தொடர்ந்து சில மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை சற்று குறைத்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய நட்டா, கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பிரதமர் மோடி 2 முறை குறித்துள்ளார். இந்த முடிவால் கிடைக்கும் பலன்களை மக்கள் நேரடியாக பெறமுடியும். 9 கோடிக்கும் அதிகமான உஜ்வாலா யோஜனா திட்ட பயணாளர்கள் தற்போது தலா ஒரு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் பெறுவார்கள்' என்றார்.