கர்நாடகத்தில் தொழில் தகராறு திருத்த மசோதா வாபஸ்- மாநில அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் தொழில் தகராறு திருத்த மசோதா வாபஸ் செய்து மாநில அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் தொழிலாளர்கள் சட்டங்களை மாற்றி அமைக்கும் வகையில் தொழில் தகராறு திருத்த மசோதா கடந்த 2020-ம் ஆண்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளை மூடினால் கர்நாடக அரசின் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் பணி நேரம் 75 மணி நேரத்தில் இருந்து 125 மணி நேரமாக உயர்த்தப்பட்டு இருந்தது.
இதனால் இந்த மசோதாவுக்கு பல்வேறு தொழில் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி கர்நாடக சட்டசபையில் தொழில் தகராறு திருத்த மசோதாவுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் மேல்-சபையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அந்த மசோதா கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் தொழில் தகராறு மசோதா வாபஸ் பெறப்படுவதாக கர்நாடக அரசு நேற்று திடீரென அறிவித்தது.