இந்தியாவில் 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2023-03-22 19:25 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த மையமானது, இந்தியா, நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு சேவையாற்றும். அத்துடன், நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, பிராந்தியத்தில் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கும்.

இந்த விழாவில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

அதிவேகமாக 5- ஜி தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த 120 நாட்களில் 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தியாகி விட்டது. இது நாட்டின் நம்பிக்கையைக் காட்டுகிறது.

4-ஜி தொழில்நுட்பத்துக்கு முன்பாக, தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற நாடாக மட்டுமே இந்தியா இருந்தது. ஆனால் தற்போது இந்தியா, இந்த தொழில்நுட்பத்தின் ஏற்றுமதியாளராக அதிவேகமாக முன்னேறி வருகிறது.

வரும் நாட்களில் 5-ஜி தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் 100 உருவாக்கப்படும். இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப 5-ஜி செயலிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவும்.

இந்த பத்தாண்டுகள், தொழில்நுட்ப பத்தாண்டுகள் ஆகும்.

2014-ம் ஆண்டுக்கு முன்பாக நாட்டில் 6 கோடி பிராட்பேண்ட் இணைப்புகளை மக்கள் பயன்படுத்தினர். தற்போது அந்த எண்ணிக்கை 80 கோடியாக உள்ளது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு, இணைய தள பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. தற்போது அது 85 கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் பெரும்பான்மையோர் இணையதளம் பயன்படுத்துகிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் அரசு துறையினரும், தனியார் துறையினரும் இணைந்து 25 லட்சம் கி.மீ. தொலைவுக்கும் அதிகமான கண்ணாடி இழை கேபிள்களைப் பதித்திருக்கிறார்கள்.

2 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 5 லட்சம் பொது சேவை மையங்கள், டிஜிட்டல் சேவைகளை வழங்குகின்றன. நமது நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம், மற்ற பொருளாதாரத்தை விட 2½ மடங்கு வேகமாக விரிவடைந்து வருகிறது.

இந்தியாவில் தற்போது 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. உலகிலேயே செல்போன்கள் இணைப்புகள் அதிகம் உள்ள ஜனநாயகம், இந்தியாதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவின்போது பிரதமர் மோடி, பாரத் 6-ஜி தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை வெளியிட்டதுடன், 6-ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்