மழைக்காலங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்து கடும் அவதி: தமிழர்கள் வாழும் காட்டன்பேட்டை பகுதிக்கு விடிவு காலம் பிறக்குமா?

மழைக்காலங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்து கடும் அவதிபடுவதால் தமிழர்கள் வாழும் காட்டன்பேட்டை பகுதிக்கு விடிவு காலம் பிறக்குமா?

Update: 2022-09-25 22:04 GMT

பெங்களூரு: தமிழர்கள் வாழும் பகுதியான காட்டன்பேட்டையில் மழை காலங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்து விடுவதால் பெரும் அவதிக்கு உள்ளாவதாக மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

தமிழக மக்களை பற்றி....

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தமிழ்நாடு திருநெல்வேலி, தூத்துக்குடி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வசித்து வருகின்றனர். பெங்களூருவில் வசித்து வரும் தமிழ் மக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். ஆனால் பெங்களூருவில் குடிசை பகுதியில் வசிக்கும் தமிழக மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடைப்பது இல்லை. இதனை பற்றி மக்கள் பிரதிநிதிகளும் கவலைப்படுவது இல்லை.

இந்த நிலையில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டன்பேட்டை சித்தார்த் நகரில் தமிழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். குடிசை பகுதி என்று கூறப்படும் சித்தார்த் நகரில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தாழ்வான பகுதியில் உள்ள சித்தார்த் நகரில் ஆண்டுதோறும் மழை காலங்களில் மக்கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதாவது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது.

குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு

மேலும் சித்தார்த் நகரில் உள்ள சாக்கடை கால்வாய் தண்ணீரும் மழை நேரங்களில் வீடுகளில் புகுந்து விடுகிறது. வீடுகளுக்குள் மழைநீரும், சாக்கடை கால்வாய் கழிவுநீரும் ஒரே நேரத்தில் புகுந்து விடுவதால் மழை நேரங்களில் இரவு முழுவதும் மக்கள் தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள். மக்கள் படும் துயரங்களை தீர்க்க எம்.எல்.ஏ.வோ, மாநகராட்சி அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து சித்தார்த் நகரில் வசித்து வரும் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

சுஜாதா என்ற பெண் கூறுகையில், 'ஆண்டுதோறும் மழை காலங்களில் நாங்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகிறோம். எங்களது கஷ்டத்தை சரிசெய்ய தொகுதி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் வருகிறார்கள். வீடுகளில் தண்ணீர் புகுந்ததை பார்த்து விட்டு செல்கிறார்கள். அவ்வளவு தான். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதை தடுக்க யாரும் நடவடிக்கை எடுப்பது இல்லை. மழை நேரத்தில் எங்கள் பகுதியில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீரும் மழைநீருடன் கலந்து விடுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால் குழந்தைகளின் உடல்நலனும் பாதிக்கப்படுகிறது. எங்கள் பிரச்சினையை சரிசெய்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

5 அடிக்கு மேல் நிற்கும் தண்ணீர்

அமுதா என்ற பெண் கூறுகையில், 'மழை வந்தால் நாங்கள் தூக்கத்தை தொலைத்து விட வேண்டியது தான். இரவு முழுவதும் தூங்காமல் வீடுகளுக்குள் புகுந்து விடும் தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றி வருகிறோம். எங்கள் பகுதியில் பல மாதங்களாக சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யவில்லை. மழை நேரத்தில் சாக்கடை கால்வாய் கழிவுநீரும் வீடுகளுக்குள் வந்து விடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் அடிக்கடி வருகிறது. மழை நேரத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடாதபடி தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

கஸ்தூரி என்ற பெண் கூறும்போது, 'நாங்கள் வசித்து வரும் சித்தார்த் நகர் பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகிறோம். மழை காலங்களில் எங்கள்பாடு பெரும் திண்டாட்டம் தான். வீடுகளுக்குள் தண்ணீர் வந்து விடுகிறது. வீட்டிற்குள் 5 முதல் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கிறது. இதனால் தரையில் கால் வைக்க முடியாத நிலை உள்ளது. மழை பெய்யும் போதோ, மழை நின்ற பின்னரோ எங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித உதவியும் செய்வது இல்லை. கஷ்டமோ, நஷ்டமோ அதை நாங்கள் தான் பார்க்க வேண்டி உள்ளது. எம்.எல்.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் வந்தாலும் 5 நிமிடத்திற்கு மேல் எங்கள் பகுதியில் நிற்பது இல்லை. எங்களிடம் குறைகளையும் கேட்பது இல்லை. நாங்கள் படும் கஷ்டத்தை யாரிடம் சென்று சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் படும் கஷ்டத்திற்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்கும் என்று தெரியவில்லை' என்றார்.

நிவாரணம் கிடைப்பது இல்லை

ராம்குமார் என்பவர் கூறுகையில், 'மழை காலத்தில் எங்கள் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. மழை நின்ற போது நாங்கள் தான் எங்களை பகுதியை சுத்தம் செய்கிறோம். மழையால் பாதிக்கப்படும் எங்களுக்கு யாரும் உதவி செய்வது இல்லை. அதிகாரிகள் வந்தாலும் எங்கள் பகுதியை சுத்தம் செய்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் சுத்தம் செய்ய யாரும் நடவடிக்கை எடுப்பது இல்லை. நிவாரண உதவி கூட கிடைப்பது இல்லை. மழை காலத்தில் எங்களின் துயரத்தை துடைக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள், எம்.எல்.ஏ. செயல்பட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்' என்றார்.

மீனாட்சி சுந்தரம் என்பவர் கூறும்போது, 'மழை காலத்தில் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறோம். வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்களும் சேதம் அடைகின்றன. குறிப்பாக மழை நேரத்தில் உணவுக்கே கஷ்டப்படுகிறோம். எங்கள் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் சரியாக வருவது இல்லை. இதுதவிர நிறைய மக்கள் பிரச்சினை உள்ளது. அதையும் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்