சாந்திநகரில் என்.ஏ.ஹாரீசின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுவாரா தமிழர் சிவக்குமார்?
பெங்களூருவில் உள்ள முக்கிய இடங்களான எம்.ஜி.ரோடு, பிரிகேடு ரோடு, சர்ச் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி சாந்தி நகர். இந்த தொகுதியின்
எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.ஏ.ஹாரீஸ் இருக்கிறார். சாந்திநகர் தொகுதியில் பெங்களூரு மாநகராட்சியின் ஜோகுபாளையா, சாந்தலா நகர், அகரம், வண்ணார்பேட்டை, நீலசந்திரா, சாந்திநகர், டொம்லூர் ஆகிய 7 வார்டுகள் உள்ளன.
இங்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 395 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 920 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 427 பெண் வாக்காளர்களும், 48 பேர் 3-ம் பாலினத்தினரும் அடங்குவர். பிற தொகுதிகளை ஒப்பிடுகையில் கன்னட மக்கள் இங்கு குறைந்த அளவில் இருக்கிறார்கள். ஏறக்குறைய சுமார் 50 சதவீத வாக்காளர்கள் தமிழர்கள் ஆவார்கள். இதனால் வெற்றி வேட்பாளரை தேர்வு செய்பவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இந்த தொகுதியில் 195 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சாந்திநகர் தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் கடந்த 2018-ம் ஆண்டு வரை 12 தேர்தல்கள் நடந்துள்ளது. இதில் 8 முறை காங்கிரஸ் கட்சியும், இந்திரா காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதாதளம் (எஸ்) கட்சி, பா.ஜனதா ஆகிய கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
சாந்திநகர் தொகுதியில் இருந்து கடந்த 2008, 2013, 2018-ம் ஆண்டுகளில் போட்டியிட்ட என்.ஏ.ஹாரீஸ் வெற்றி பெற்றார். 2008-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மல்லிகார்ஜூனையும், 2013-ம் ஆண்டு தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்ட வாசுதேவ மூர்த்தியையும், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதாவின் வாசுதேவ மூர்த்தியையும் என்.ஏ.ஹாரீஸ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ள என்.ஏ.ஹாரீஸ் வருகிற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்குகிறார்.
சாந்திநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் கடந்த முறை போட்டியிட்டு 2-வது இடம் பிடித்த வாசுதேவ மூர்த்தியின் சகோதரர் சிவக்குமாருக்கு இந்த முறை பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. தமிழர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கட்சி மேலிடம் கருதுவது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரும் சாந்திநகர் தொகுதியில் தீவிர களப்பணியாற்றி வருகிறார். தமிழர்களின் வாக்குகளை நம்பி சிவக்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழர்களின் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும் பலம் வாய்ந்த என்.ஏ.ஹாரீசை அவரால் வீழ்த்த முடியுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜனதாதளம்(எஸ்) கட்சி பலம் வாய்ந்த வேட்பாளரை தேடிவருகிறது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மதாய் வேட்பாளராக களம் இறங்குகிறார். ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளின் குறைபாடுகளை கூறி வாக்கு சேகரிக்கவும், டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட திட்டங்கள் தவிர பெங்களூருவுக்கான திட்டங்களை முன்வைத்து மதாய் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி சாந்திநகரில் மீண்டும் ஹாரீஸ் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.