முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா 5 ஆண்டுகள் நீடிப்பாரா? - டி.கே.சுரேஷ் எம்.பி. பேட்டி

முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா 5 ஆண்டுகள் நீடிப்பார் என்று கூறியுள்ள மந்திரி எச்.சி.மகாதேவப்பாவின் கருத்திற்கு டி.கே.சுரேஷ் எம்.பி. கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-18 18:45 GMT

பெங்களூரு:-

காங்கிரசில் சலசலப்பு

தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் சமீபத்தில் பேட்டி அளிக்கும்போது, முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா 5 ஆண்டுகள் நீடிப்பார் என்று கூறினார். இதற்கு டி.கே.சுரேஷ் எம்.பி. கடும் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். இது அப்போது காங்கிரசில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமூக நலத்துறை மந்திரி எச்.சி.மகாதேவப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'முதல்-மந்திரி சித்தராமையா 5 ஆண்டுகளும் பதவியில் நீடிப்பார்' என்று கூறியுள்ளார். இதற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்தராமையாவும், எச்.சி.மகாதேவப்பாவும்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள். அதில் எச்.சி.மகாதேவப்பா எந்த நேரத்தில் யாருக்கு என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் பக்குவமான தலைவர். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த மந்திரி பணியை சரியாக செய்வதை தவிர வேறு பணியில் அவருக்கு ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

அதிகாரமே வேண்டாம்

முதல்-மந்திரி பதவி குறித்து சிலர் அடிக்கடி சர்ச்சையை கிளப்புகிறார்கள். அத்தகையவர்கள் அதிகாரத்திற்காக ஏங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் அதிகாரமே வேண்டாம் என்று கூறி பின்வாங்கி கொண்டிருக்கிறேன். எனது பதவிக்காலம் இன்னும் 11 மாதங்கள் உள்ளன. எனது தொகுதியில் நான் மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன். அரசியல் என்னை போன்றோருக்கு சரிப்பட்டு வராது.

இங்கு உள்ளேயும் சரி, கட்சிக்கு வெளியேயும் சரி மரியாதை இல்லை. மக்கள் சேவையாற்ற வேறு வழிகளும் உள்ளன. எனக்கு ஓய்வு வேண்டும், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருகிறேன். கட்சியில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. நான் மீண்டும் டிக்கெட் வழங்குமாறு கேட்டால் வாய்ப்பு கிடைக்கும். போட்டியிட வாய்ப்பு கேட்காவிட்டால், வேறு ஒருவருக்கு எனது தொகுதி டிக்கெட்டை வழங்குவார்கள்.

இவ்வாறு டி.கே.சுரேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்