நடைபாதை பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுமா?

நடைபாதை பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுமா? என்பதற்கு தேவஸ்தான அதிகாரி பதில் அளித்தார்.

Update: 2023-03-05 03:55 GMT

திருமலை, 

திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி அளித்த பதில்களும் வருமாறு:-

சுரேஷ், சேலம்: சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் தொடங்கப்பட்ட பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய அறைகள் ஒதுக்கீடு, லட்டு டோக்கன்கள் வழங்கும் நடவடிக்கைகள் நன்றாக உள்ளது. அத்துடன் நந்தகம், ராம் பகீதா விடுதிகள் எதிரே உள்ள கழிவறைகளை சுத்தமாக வைப்பார்களா?

அதிகாரி: ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம்.

வெங்கடராமகிருஷ்ணா, ஐதராபாத்: ஆன்லைன் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒரே நேரத்தில் 3 மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. மாதத்துக்கு ஒரு முறை வெளியானால் நன்றாக இருக்கும்.

அதிகாரி: கொரோனா தொற்று பரவலுக்கு முன், திருப்பதி தேவஸ்தானம் 3 மாதங்களுக்கு ஒருமுறை சாமி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை வெளியிட்டது. கொரோனா பரவலால் சூழ்நிலையைப் பொறுத்து மாதம் ஒரு முறை வெளியிட்டோம். கொரோனா பரவல் குறைந்ததால் 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடுகிறோம்.

சுனந்தா, கம்மம்: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக தரை தளத்தில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுமா?

அதிகாரி: அறைகள் கிடைப்பதற்கேற்ப முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரை தளத்தில் அறைகள் ஒதுக்கி தருகிறோம்.

ரம்யா, ஐதராபாத், ஜோதி, ஏலூர்: எலக்ட்ரானிக் டிப் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மாதங்களுக்கு திரும்பப் பெற மாட்டார்கள். ஆனால் சிலர் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை மூலம் பெற்று வருகின்றனர். ஆர்ஜித சேவையில் அனைவருக்கும் தரிசன டிக்கெட்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப் லைனிலும் கொடுங்கள்.

அதிகாரி: ஆதார் மூலமாகவே ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்கிறோம். மத்திய வரவேற்பு மையத்தில் லக்கி டிப் கவுண்ட்டர் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருமலையில் முந்தைய நாள் பதிவு செய்து கொள்ளலாம்.

ஷங்கர், ஐதராபாத்: லக்கி டிப் ஆன்லைன் மூலம் சேவை டிக்கெட்டுகள் பெற்றவர்களுக்கு தங்குவதற்கு அறை ஏற்பாடுகள் செய்து தரப்படுமா?

அதிகாரி: அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம்.

சுதாகர், குண்டக்கல்: திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு செய்து கொடுக்கும் பல வசதிகள் நன்றாக உள்ளன. வெந்நீர் போடும் கீசர்கள், லிப்டுகள், கல்யாணி விருந்தினர் மாளிகையில் நிறுவ ஏற்பாடு செய்யப்படுமா?

அதிகாரி: கோவர்தன், கல்யாணி, சுதர்சன் ஆகிய தங்கும் விடுதிகள் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். அவற்றை அகற்றிவிட்டு புதிய விடுதி கட்டப்படும்.

திரிமூர்த்தி, அனகாபள்ளி: வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதை அதிகாரிகள் தடுப்பார்களா?

அதிகாரி: வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்த சிலர் கைது செய்யப்பட்டனர். இனி, இதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்.

லட்சுமி, ஐதராபாத்: ரூ.100 கட்டண அறைக்கு ரூ.500 டெபாசிட் தொகையாக வாங்கி கொள்கிறார்கள். இது சாதாரணப் பக்தர்களுக்கு சிரமமாக உள்ளது?

அதிகாரி: இதுதொடர்பாக பரிசீலனை செய்வோம்.

பிரவீன், புட்டப்பர்த்தி: கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வரும் பக்தர்களுக்கு வெயிலால் கால் பாதம் சுடுகிறது. தகுந்த ஏற்பாடுகளை செய்வீர்களா?

அதிகாரி: பக்தர்களின் கால் பாதங்கள் சுடாமல் இருக்க வெள்ளை நிறத்தில் கூல் பெயிண்ட் மற்றும் தரை விரிப்புகளை ஏற்பாடு செய்கிறோம்.

மாலதி, ஐதராபாத்: திருமலையில் அங்கப்பிரதட்சண டோக்கன்களை நேரில் கொடுங்கள்?

அதிகாரி: திருமலையில் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் நேரில் (ஆப்லைன்) கொடுப்பதால் அதிக நேரத்துக்கு வழி வகுக்கும். பக்தர்களின் வேண்டுகோளின் படி ஆன்லைனில் வெளியிடுகிறோம்.

சீதாராமுலு, கம்மம்: ஸ்ரீவாரி கல்யாணோற்சவம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளோம். 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வரவில்லை. அவர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

அதிகாரி: 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.300 டிக்கெட் தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.

வினய், மகபூப் நகர்: திருமலையில் ஜல பிரசாத குடிநீர் சரியாக இல்லை. பிளாஸ்டிக் பாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

அதிகாரி: ஒவ்வொரு நாளும் ஜல பிரசாத மையங்களில் குடிநீரை பரிசோதனை செய்வோம். அணையில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்த பிறகே சப்ளை செய்கிறோம். அறைகள் ஒதுக்கீட்டு மையங்களில் பக்தர்களுக்கு குறைந்த விலையில் டம்ளர்கள், தாமிர பாட்டில்கள் விரைவில் கிடைக்கும்.

பத்மாரெட்டி, ஐதராபாத்: அன்னப்பிரசாதம் மற்றும் தேநீர் தரிசன கவுண்ட்டர்களில் வழங்கப்படுவதில்லை?

அதிகாரி: தொடர்ந்து சப்ளை செய்கிறது.

அசோக்குமார், இந்துபுரம்: நடைபாதை பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுமா?

அதிகாரி: திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய முன்னேற்பாடு பணிகளை செய்வோம்.

மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்